Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, March 14, 2012

இறக்கமுடியாத சிலுவைகள்-வைரமுத்து

வைரமுத்துவின் கவிதைகள்
இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
Read full history - இறக்கமுடியாத சிலுவைகள்-வைரமுத்து

Friday, March 9, 2012

அனுபவித்தது -கண்ணதாசன்

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்…..

இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது .............
பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான்
இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான்

ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான்
இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதென கேட்டான்
அறிந்து பாரேன இறைவன் பணித்தான்

அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான்
பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதென கேட்டான்
பகிர்ந்து பாரேன இறைவன் பணித்தான்

மனைவியின் சுகம் என்பது யாதென கேட்டான்
மணந்து பாரேன இறைவன் பணித்தான்

பிள்ளைபேறு என்பது யாதென கேட்டான்
பெற்றுப் பாரேன இறைவன் பணித்தான்

முதுமை என்பது யாதென கேட்டான்
முதிர்ந்து பாரேன இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னவென்று கேட்டான்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்

இறப்பின் பின்பு என்னவென்று கேட்டான்
இறந்து பாரேன இறைவன் பணித்தான்

கேட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக கடுப்பாகி ......இதெல்லாம் சரிதான் ...
எல்லாவற்றையும் நான் அனுபவித்தேதான் அறிவது என் வாழ்கை என்றால்
ஆண்டவனே நீ எதற்கு என்று கேட்டான்…

ஆண்டவன் சற்றே அருகில் வந்து ...
அனுபவம் என்பதே நான்தான் என்றான் ...............

~ கண்ணதாசன் கவிதையிலிருந்து அனுபவித்தது ~
Read full history - அனுபவித்தது -கண்ணதாசன்

Saturday, February 25, 2012

கவிக்கோ அப்துல் ரகுமான்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடித்தல் என்பது எதற்குமில்லை.

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல.

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவை நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பாய் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலேதான் தோற்கின்றார்.

ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டை – உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டை – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்?’ என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு.

-கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்
Read full history - கவிக்கோ அப்துல் ரகுமான்

பாரதி கவிதைகள்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? – அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?
Read full history - பாரதி கவிதைகள்

பாரதி கவிதைகள்

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
Read full history - பாரதி கவிதைகள்

பாரதி கவிதைகள்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.
Read full history - பாரதி கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள்

கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி.
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.
Read full history - பாரதிதாசன் கவிதைகள்

முட்டையிடும் பெட்டைக்கோழி!

இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;

அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!

மேலும்…

எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!

மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்

கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!

எழுதியவர் :கவிஞர் வாலி
Read full history - முட்டையிடும் பெட்டைக்கோழி!

About Me

My Photo
Senthamaraikannan
I`m Author of Senthamaraikannanclub and i loves blogging and Socila networking .,
View my complete profile